தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,523 லிருந்து குறைந்து 1,512 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,51,012 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 189 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 183 என்று இருந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,921 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 16 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,850 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,725 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,61,376 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 6 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கோவை-173, ஈரோடு-141, திருவள்ளூர்-64, தஞ்சை-98, நாமக்கல்-57, சேலம்-52, திருச்சி-66, திருப்பூர்-67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 30 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில் நேற்று திடீரென குறைந்து 19,622 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இந்நிலையில் இன்று 30,203 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 115 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் கேரளாவில் கரோனா தொற்று பரவல் அதிகம் இருந்து வருவதால் கேரளாவில் இருந்து தமிழக எல்லையான குமரியில் உள்ள கல்லூரிகளுக்கு வர கேரள மாணவ மாணவிகளை மாவட்ட நிா்வாகம் வலியுறுத்தவில்லை. அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகளை பொறுத்தவரை தமிழக எல்லையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் கேரளா மாணவ மாணவிகளுக்கும் தற்போது அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.