சென்னை அயப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழகத்தில் வேகமாகப் பரவிய கரோனா தற்போது அதே வேகத்தில் குறைந்துவருகிறது. கரோனா குறைந்துவருவதால் பாதிப்பில் இருந்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது. 8,072 ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட மொத்தம் 25,134 படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் நேற்று (01.06.2021) காலியாக இருந்தது.
ஜூன் மாதத்திற்கான 42 லட்சம் கரோனா தடுப்பூசிகளில், சுமார் 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் நேற்று வந்திருக்கின்றன. தற்போது தமிழகத்தில் ஆறரை லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கரோனா பரவல் சற்று அதிகம் உள்ள மேற்கு மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும்" எனத் தெரிவித்தார்.