கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சை மற்றும் நோய்த் தொற்று தொடர்பான நடவடிக்கைகளும், தகவல் வெளியீடுகளும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அதையடுத்து கடலூர் கடலூர் மாவட்ட தி.மு.க சார்பில் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மேற்கு மாவட்டச் செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ, கடலூர் எம்.பி ரமேஷ் மற்றும் எம்.எல்.ஏக்கள் சபா.ராஜேந்திரன், துரை.கி.சரவணன் ஆகியோர் நேற்று (06/07/2020) கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரியைச் சந்தித்தனர். அப்போது கரோனா தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட 32 கோரிக்கை மனுக்களை வழங்கி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும், அவற்றுக்கான பதிலையும் மாவட்ட மக்கள் அறியும் வகையில் வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டனர்.
பின்னர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏவுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசும் போது, "தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை மதிக்காமல் ஆளும் அ.தி.மு.க அரசு செயல்படுவதால் கிராமங்களில் கூட கரோனா தொற்று அதிக அளவில் பரவ தொடங்கியுள்ளது. கரோனா தொற்று பாதிப்பு தொடங்கி 100 நாட்கள் கடந்த நிலையிலும் கட்டுப்படுத்தப்படாததால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக அரசிடம் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளையும் பெற்று ஒரு நிலைப்பாட்டில் வைரஸ் தாக்கத்தின் தன்மையைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கடந்த மார்ச் மாதமே அறிவுறுத்தியிருந்தார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கட்சிகளை உதாசீனப்படுத்தி 'மக்களை நாங்கள் காப்பாற்றுவோம்' எனப் பேசிய எடப்பாடி பழனிசாமி, தற்போது கடவுளைக் கை காட்டுகிறார்.
அரசு நோயின் தன்மையை அலட்சியமாகக் கையாண்டதால் தற்போது கையை விட்டுப் போச்சு கட்டுப்படுத்த முடியவில்லை என்கின்றனர். பிற மாநில முதல்வர்கள், மாற்றுக் கட்சியினர், எதிர்க்கட்சியினரின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கும் போது எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தனித்துச் செயல்படுகிறார். இனியாவது அனைவரின் கருத்துகளையும் கேட்டு கரோனாவைக் கட்டுப்படுத்த, தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயே அதிக அளவில் கரோனா பரிசோதனை செய்வதாக பொய்யாகக் கூறுகின்றனர். ஆரம்பத்திலேயே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்தும், கோயம்பேடு மார்க்கெட்டை மூடியிருந்தாலும் கரோனா தொற்று பரவாமல் தடுத்திருக்க முடியும். தமிழக அரசின் தவறான நடவடிக்கைகளால் மாநிலத்தில் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டு வருமானம் இல்லாமல் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.