தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் தற்போது மீன் பிடித் தடைக்காலம் என்பதால் நாகை மாவட்டம் செரூகூர் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் (28.04.2024) விசைப்படகில் மீன் பிடிக்க செல்லாமல் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில் கடலுக்கு சென்றுள்ளனர். இவர்களின் முருகன் என்பவர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று (29.04.2024) இரவு மின்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகில் இருந்த மீன்கள், மீன்பீடி வலைகள், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
அச்சமயத்தில் படகின் உரிமையாளரான முருகன் கடற்கொள்ளையர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடற்கொள்ளையர்கள் முருகனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க கடலில் குதித்த முருகனை சக மீனவர்கள் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டார். கடற்கொள்ளையர்கள் நடத்திய இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முருகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கடலோர காவல் குழுமத்தில் நாகை மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். நாகை மீனவர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.