காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நாளை (21/02/2021) தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார்.
வறட்சி மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் பயனடையும் வகையில், மாயனூரில் இருந்து காவிரி உபரிநீரை புதுக்கோட்டை வழியாகக் கொண்டு சென்றால், வெள்ளப் பாதிப்பும் இருக்காது, வறட்சி மாவட்டங்களும் வளம்பெறும் என்று நூறு வருடங்களாக விவசாயிகள் கோரிக்கை வைத்துவருகின்றனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மீண்டும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போதுதான் முதல்கட்டமாக ரூபாய் 6,941 கோடி மதிப்பீட்டில் 118 கி.மீ தூரத்திற்கு கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் நடந்துவரும் நிலையில், முதல்கட்டப் பணியை நாளை (21/02/2021) முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விராலிமலைத் தொகுதிக்கு உட்பட்ட குன்னத்தூரில் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்காக புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் வரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை நகரச் செயலாளர் பாஸ்கர் வீடு வீடாகச் சென்று குங்குமம், பூ, வெற்றிலை பாக்கு வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்புக் கொடுத்துள்ளார்.
இதனிடையே, ஆலங்குடி தொகுதியில் உள்ள அம்புலி ஆறு, வில்லுனி ஆறுகளிலும் தண்ணீரைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசின் கட்டணமில்லா '1100' என்ற எண்ணில் கோரிக்கை வைத்துள்ளனர்.