தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்; பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்களை தமிழக அரசு அவ்வப்போது வழங்கி வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியபோதும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று (22/04/2021) காலை 11.00 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் கொண்ட 11 பேர் கொண்ட குழு ஆலோசனையில் பங்கேற்கிறது.
கட்டுப்பாடுகளால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதா? மேலும் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.