சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசுதான் முடிவு செய்யும். வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அரசுக்குத் தெரிவித்துள்ளோம். தேர்தல் வழிமுறைகளைப் பின்பற்றி மே 2ஆம் தேதி (ஞாயிறு) அன்று வாக்கு எண்ணிக்கை நடக்கும். சுமார் 16,387 அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி இல்லை. ஆர்டி - பிசிஆர் பரிசோதனை, தடுப்பூசி சான்று ஆகியவை இருந்தாலும், 98.6 டிகிரிக்கு மேல் இருந்தால் அனுமதி இல்லை. தொகுதிகள், அதிகாரிகள் ஆகியவற்றைப் பொறுத்து வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கை மாறலாம்" என்றார்.
மே 1, மே 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில், தேர்தல் அதிகாரி இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடு தேவையா? உள்ளிட்டவை குறித்து ஆலோசித்திருந்தார். மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் கொடுத்த பரிந்துரைகளின்படி, மே மாதத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்பதை தமிழக அரசு இன்றோ (அல்லது) நாளையோ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.