தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான இன்றைய விவாதத்தின்போது, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், "சென்னை மெரினா கடற்கரை ரூபாய் 20 கோடியில் அழகுபடுத்தப்படும். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூபாய் 2 கோடியில் பசுமைப் பூங்காக்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ரூபாய் 32 கோடியில் நவீனப்படுத்தப்படும். பொங்கல், செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று அரசு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். அரசு மற்றும் தனியார் நிலங்களில் நாட்டு மரம் நடும் திட்டத்துக்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கப்படும்.
தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் ஒலிம்பிக் மண்டலங்கள் அமைத்து வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் 50 வீரர்களை அனுப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "கோவை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மூன்று உயர் வனவிலங்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். மன்னார் வளைகுடா, பாக். விரிகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும். தமிழ்நாடு வனத்துறையின் நடவடிக்கைகள் மின்னணுமயமாக்கப்படும்" என்றார்.