தமிழ்நாட்டில் 17,297 கோடி ரூபாய் மதிப்பிலான 33 திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (20.07.2021) ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. சென்னை கிண்டி ஐடிசி ஹோட்டலில் 'முதலீட்டார்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “பண்பாட்டின் முகவரியாக தமிழ்நாடு இருந்தது. முதலீட்டார்களின் முகவரியாகவும் தமிழ்நாடு மாற வேண்டும். கரோனா காலத்தை, கரோனாவை வென்ற காலமாக மாற்றியுள்ளோம். தொழிலை வர்த்தகமாக கருதாமல் சேவையாக எண்ணி தொழில் முதலீட்டாளர்கள் செயல்படுகின்றனர். தெற்காசியாவில் தொழில் செய்ய உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே என் லட்சியம்'' என்றார்.
இன்று கையெழுத்திடப்பட்ட இந்த 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டில் 56,041 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம், காற்றாலை, ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட இருக்கின்றன. அதானி, ஜேஎஸ்டபிள்யூ, கேப்பிட்டல் லாண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஒப்பந்தங்கள் மட்டுமின்றி 14 பதிய திட்டங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட இருக்கிறார்.