சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில் கோரிக்கை முறையீடு போராட்டம் நடைபெற்றது.
புதிதாக அறிவிக்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கான ஒப்பந்த பணியிடங்களாக 341 ஆய்வக நுட்பனர்கள் உட்பட நிலை-2 பணியிடங்களை அறிவித்துள்ளதை நிரந்தர காலமுறை பணியிடங்களாக அறிவித்து தேர்வாணையம் மூலம் சமூகநீதி பாதுகாப்புடன் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் போதுமான நிரந்தரப் பணியிடங்கள் இல்லாமல் செயல்பட்டு வருவதால் பணி நியமனம் சார்ந்த அனைத்துப் பணிகளும் தாமதமாகிறது, அரசாணை தாமதமாகிறது.
அரசாணை 401-ன் படி மதிப்பெண் தரவரிசை தகுதியினை கைவிட்டு, எழுத்துத்தேர்வு மூலம் ஆய்வக நுட்பனர்கள் நிலை-2 பணி நியமனங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் வருடம் இருமுறை பணி நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க மாநிலத் தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் நா.சங்கர் நன்றியுரையாற்றினார்.