கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ‘இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1’ தடகள போட்டியில், 200 மீட்டர் பெண்களுக்கான பிரிவில் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி சேகர் முதலிடம் பிடித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், கூடுர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி சேகர்(23). திருவனந்தபுரத்தில் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. தேசிய அளவிலான இந்த போட்டிகளில் நேற்று நடைபெற்ற பெண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தேசிய அளவில் சிறந்த வீராங்கனைகளான ஹீமா தாஸ், டூட்டி சந்த், தமிழகத்தின் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். போட்டியில், தனலட்சுமி 20.21 விநாடிகளில் 200 மீட்டர் தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தேசிய அளவிலான வீராங்கனை ஹிமா தாஸ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்த 200 மீட்டர் தடகள போட்டியில் முதலிடம் பிடித்த தனலட்சுமி, இந்தியாவின் பெண் உசேன் போல்ட் என அழைக்கப்படும் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்பு 200 மீட்டர் தடகள போட்டியில் பி.டி.உஷா 20.26 விநாடிகளில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது தனலட்சுமி 20.21 விநாடிகளில் இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் இலக்கை கடக்க ஹீமா தாஸ் 20.24 விநாடிகள் எடுத்துகொண்டார்.