புதிய ரூ.200 நோட்டுகள் தமிழகத்தில் இன்று முதல் வினியோகம்
ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழு பரிந்துரையின் படி புதிய ரூ.200 நோட்டுகள் வெளியிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியிருந்தது.
அந்தவகையில் ரூ.2,000 நோட்டை சிரமம் இன்றி பொதுமக்கள் மாற்றுவதற்காக புதிய ரூ.200 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு உள்ளது. இந்த நோட்டுகள் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டது.
சென்னை ரிசர்வ் வங்கிக்கு இந்த புதிய ரூ.200 நோட்டுகள் கண்டெய்னர்கள் மூலம் ஏற்கனவே கொண்டுவரப்பட்டு விட்டன. ஆனாலும் தொடர் விடுமுறை மற்றும் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த புதிய ரூ.200 நோட்டுகள் வங்கிகளுக்கு பிரித்து கொடுக்கப்படவில்லை. இதனால் சென்னை ரிசர்வ் வங்கியில் இந்த புதிய ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் இந்த புதிய ரூ.200 நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் முதற்கட்டமாக பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் தமிழக வங்கிகளில் இன்று முதல் ரூ.200 புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்பட உள்ளன.