நாமக்கல் மாவட்டம் வேல்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். கட்டட தொழிலாளியான இவரது மகன் மதன்குமார் (28). எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்த மருத்துவரான மதன்குமார், மேல்படிப்புக்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அந்தக் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று படித்து வந்த மதன்குமார் திடீரென்று மாயமானார். அவருடன் படித்த சக மாணவர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று (02-11-23) விடுதியின் பின்புறத்தில் மதன்குமார் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். மதன்குமாரின் உடல் பாதி வரை எரிந்த நிலையில் இருந்ததைக் கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த அவர்கள், சடலமாக இருந்த மதன்குமாரை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விடுதியின் மாடியில் வைத்து மதன்குமாரை சில மர்ம நபர்கள் கொலை செய்து தீ வைத்து எரித்துள்ளனர். அதன் பிறகு, பாதி வரை எரிந்த அவரின் உடலை மாடியில் இருந்து கீழே தூக்கிப் போட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் சோதனை செய்த காவல்துறையினர் சில தடயங்களையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, கொலை நடந்த விடுதியைச் சோதனை செய்த காவல்துறையினர், அங்கிருந்த செல்போன் ஒன்றைக் கைப்பற்றி பரிசோதித்து வருகின்றனர். மேலும், அவர்கள் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே மதன்குமாரின் இறப்பு குறித்த காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேற்படிப்புக்காகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஜார்க்கண்டில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.