மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்நாட்டில் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை வெளிப்படுத்த வேண்டும்.
மேலும், அவரது சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும்” என்று கூறினார்.
அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிட கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 26ஆம் தேதி அன்று நினைவிடத்தை திறக்கவுள்ளார்.