கடலூர் மாவட்டம் பண்ருட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று சென்னை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 6 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதாம் உசேன்(வயது 26) என்பதும், கொத்தனார் அருண்குமார் (வயது 24) என்பதும் தெரிய வந்தது. தமிழ் திரைப்படம் ஒன்றில் வருவது போன்று கஞ்சாவை கடத்தி மற்றொரு கஞ்சா கும்பலிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்கள். அதேபோன்று இரண்டு பேரிடம் 6 கிலோ கஞ்சா பொட்டலங்களை கொடுத்து அவர்கள் சொன்ன இடத்தில் கொடுக்க கூறியுள்ளனர். அதேபோன்று சதாம், அருண்குமார் ஆகியோர் பைக்கில் கஞ்சாவை எடுத்துச் சென்றபோது தான் போலீசில் சிக்கினர். மேலும் இந்த கஞ்சாவை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யவும் எடுத்து செல்லப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இதையடுத்து 6 கிலோ கஞ்சாவையும், அவர்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.