திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலையைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரசிகர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
நடிகர் திகலம் சிவாஜி கணேசன், ஏறத்தாழ முந்நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் பெரும் புகழ் எய்தினார். வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட போராளிகளை நம் கண்முன் நிறுத்தினார். கர்ணன் போன்ற புராண பாத்திரங்களாகத் திரையில் வாழ்ந்து காட்டினார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து தன் முத்திரையை பதித்தவர். மிக உயரிய விருதான செவாலியே, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.
அவரது மறைவுக்குப் பின்னர், திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. காரணம், தனது இள வயதில் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கினார். பிறகு திரையுலகில் நுழைந்து பல சாதனைகளைப் படைத்தார்.
இந்தச் சிலைக்கான செலவு முழுவதையும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஏற்று சிறப்பாக உருவாக்கினார். அச்சிலையை பாலக்கரை ரவுண்டானாவில் கொண்டு போய் வைத்து திறப்பு விழாவுக்கான தேதியை அறிவிப்பதற்குக் கோரிக்கை வைத்தனர். அந்த நேரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. இதனால், சிலை திறப்பு விழா தேதி தள்ளிப் போனது.
இந்நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஜெ. முதல்வரானார். மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், 94 அடி உயரமுள்ள சிவாஜியின் வெண்கல சிலையைக் கடந்த 8 ஆண்டுகளாக துணி போர்த்தி மூடி வைத்துள்ளனர். திறக்கப்படாமலே உள்ளது.
இதற்கிடையில், சிவாஜி ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன்பு நள்ளிரவில் தீடீரென சிவாஜி சிலையை மூடியிருந்த துணியை அகற்றினார்கள். அகற்றியவர்களை போலீசார் உடனே கைது செய்தனர்.
இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு, நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை மற்றும் அனைத்துக் கட்சியினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தை திருச்சியில் நாளை நடத்தவிருக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப்லூயிஸ் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.