திருச்சியில் லஞ்சம் வாங்கிய புகாரில் டிஎஸ்பி கைது செய்யப்பட்ட நிலையில், லஞ்சம் வாங்க அவருக்கு உதவி புரிந்த புகாரில் தலைமை காவலர் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் பத்திரப்பதிவு எழுத்தாளராக பணியாற்றி வந்தவர் கீதா. வழக்கு ஒன்றில் சிக்கிய கீதாவை விடுவிப்பதற்காக அவரிடம் இருந்து திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஆல்பர்ட் என்பவர் கடந்த மாதம் 15 ஆம் தேதி ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற பொழுது, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்திருந்தனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி ஆல்பர்ட் லஞ்சம் பெற அதே அலுவலகத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த ஹேமா கேத்தரின் என்பவர் உதவி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரில் தலைமைக் காவலர் ஹேமா கேத்தரினை விசாரிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் பரிந்துரை வந்திருந்தது. அதனடிப்படையில் விசாரணைக்கு முன்னரே ஹேமா கேத்தரினை ஆயுத படைக்கு மாற்றி இருந்த நிலையில், விசாரணைக்கு பின் புகார் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது தலைமைக் காவலர் ஹேமா கேத்தரினை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.