சேலத்தில் சிறைக்காவலர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள மத்திய சிறைக்காவலர்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவருடைய மனைவி தேவி. ஒரு ஆண்டுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. ரஞ்சித்குமார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள கிளைச்சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறையில் பணியாற்றி வந்தார். அப்போது குறிப்பிட்ட சில கைதிகளுக்கு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை பயன்படுத்த அவர்களின் உறவினர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாக புகார்கள் வந்தன.
இதையடுத்து ரஞ்சித்குமார், சேலத்தில் இருந்து ராசிபுரம் கிளைச்சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கே சென்றபிறகும் அவருடைய லஞ்ச வேட்டை நிற்கவில்லை.
ஜாமினில் விடுதலை ஆகி வெளியே இருக்கும் திருட்டு வழக்கு குற்றவாளி சிவக்குமார் என்பவருடன் சேர்ந்து கொண்டு, சிறையில் இருக்கும் கைதிகள் சிலருக்கு உடல்நலம் சரியில்லை எனவும் அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டுமானால் டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும்கூறி, அவர்களின் பெற்றோர், மனைவி ஆகியோரிடம் நூதனமுறையில் ஆயிரக்கணக்கில் பணம் கறந்து வந்துள்ளார். இதற்கு சிறை வார்டன் ரஞ்சித்குமார்தான் இவ்வாறு திட்டம் போட்டுக் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.
மேலும், ரஞ்சித்குமாரை மிரட்டி அடிக்கடி சிவக்குமாரும் பணம் பறித்து வந்தார். இதையெல்லாம் கண்டுபிடித்த நாமக்கல் காவல்துறையினர், சிவக்குமாரை பிடித்து விசாரித்தபோது, சிறைக்காவலர் ரஞ்சித்குமார் பற்றிய விவரங்கள் தெரிய வந்தது. திருட்டு வழக்கு கைதிகள் சிலர் அவரிடம் திருடிய நகைகளை கொடுத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரஞ்சித்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள டிராவல்ஸ்இன் என்ற தனியார் தங்கும் விடுதிக்கு வந்த அவர் அறை எடுத்து தங்கினார். இன்று (அக்டோபர் 3, 2018) காலை நீண்ட நேரமாகியும் அவருடைய அறைக்கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் அறைக்கதவை தட்டிப்பார்த்தும் எந்த தகவலும் இல்லை.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு குளியல் அறையில் ரஞ்சித்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்த உறவினர்கள் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரஞ்சித்குமாரின் தற்கொலையின் பின்னணியில் இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. கைதிகளின் உறவினர்களிடம் பணம் பறித்தது, சில திருட்டு கைதிகளிடம் நகைகளை வாங்கியது ஆகிய குற்றங்களுக்காக காவல்துறையினர் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
அதேநேரம், ரஞ்சித்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு இருந்து வந்ததாகவும், இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகின்றனர். அஸ்தம்பட்டி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.