கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்துள்ள எ.சித்தூரிலுள்ள ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
நிலுவை தொகையை வட்டியுடன் தர வேண்டும், விவசாயிகளை ஏமாற்றி, கடன் என்ற பெயரில் ஆலை நிர்வாகத்துடன் துணை நின்று 40 கோடியை ஏமாற்றிய பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கரும்பு டன் ஒன்று 4000 ரூபாய் வயல்வெளி விலையாக கொடுக்க வேண்டும், கரும்பு நிலுவை தொகை வழங்கும் வரை விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், சித்தூர் ஆரூரான் ஆலை இரண்டு வருடமாக மூடி இருப்பதால், வெளி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்புவதால் விலை குறைவதுடன், எடை மோசடி நடைபெறுவதால் அரசே கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் உழவர் சந்தை முன்பாக விவசாயிகள் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஆனால் ஆலை நிர்வாகமோ , அரசு துறை அதிகரிகளோ யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் இரண்டாவது நாளான நேற்று நிலுவைத்தொகை தராமல் ஏமாற்றும் ஆலை நிர்வாகத்தை கண்டித்து காதில் பூ வைத்தும், விவசாயிகளை ஏமாற்றி ஆலை நிர்வாகத்துக்கு கடன் கொடுத்துவிட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் வங்கியை எதிர்த்து பட்டை நாமம் போட்டும் போராட்டம் நடத்தினர்.
மூன்றாவது நாளான இன்று விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் எலிக்கறி, பாம்புக்கறி சாப்பிடும் அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை எடுத்து காட்டும் விதமாக பாம்பையும், எலியையும் கடித்து போராட்டம் நடத்தினர்.
அரசும், ஆலை நிர்வாகமும் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை அலட்சியப்படுத்துமானால் உயிரை மாய்த்து கொள்ளும் போராட்டம் நடத்த நேரிடும் என அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.