கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு (CIFA-Consortium of Indian Farmers Associations) தேசிய தலைவர் R.விருத்தகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“2020- 2021 பருவத்தில் 10% சர்க்கரைக் கட்டுமானம் (sugar reccovery) வரும் கரும்புக்கு FRP விலை (Fair and Remunerative Price) மெ.டன்னுக்கு ரூபாய் 2850/ என மத்திய அரசு அறிவித்துள்ளது. 10% சர்க்கரைக் கட்டுமானமுள்ள கரும்புக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும். 9.5% க்கு குறைவாக சர்க்கரை கட்டுமானம் வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கரும்பு விவசாயிகளுக்கு ரூபாய் 2707.50 FRP விலையாக கிடைக்கும். கரும்பு பயிரை நம்பி விவசாயம் செய்கிற, 500- க்கு மேற்பட்ட இயக்கத்தில் உள்ள இந்திய சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பும் 5 கோடி கரும்பு விவசாயக் குடும்பங்கள், 5 இலட்சம் ஆலைத் தொழிலாளர் குடும்பங்கள், அதெல்லாமல் கரும்பு நடவு, களையெடுப்பு, கரும்பு வெட்டும் கோடிக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் அனைத்தும் நிர்க்கதியான நிலைக்கு ஆளாகும் நிலை உருவாகிவிட்டது.
இந்திய சர்க்கரை உற்பத்தி (sugar production) 130 கோடி மக்களின் நுகர்வுக்கு (consumption) அதிகமாக உள்ளதாலும், 70 இலட்சம் மெ.டன்னுக்கு அதிகமாக ஊக்கத்தொகையுடன் (incentive) சர்க்கரை ஏற்றுமதிக்கு (export sugar) அனுமதி வழங்கிய பின்னரும், சக்கரைக் கையிருப்பு (buffer stock) தொடர்ந்து அதிகரித்த பின்னரும், பல மாநிலங்களில் உற்பத்தியும் சர்க்கரைக் கட்டுமானமும் அதிகரித்துள்ளதாலும், இந்த விலையை மத்திய அரசு அறிவித்துள்ளதாக அறிகிறோம்.
FRP (நியாயமான ஆதாய விலை- பெயர் வைத்தது; மேநாள் மத்திய நிதி அமைச்சர், பரிந்துரை செய்வது CACP (Commission for Agricultural Costs and Prices), ஆய்வு செய்வது: பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (Cabinet Committee for Ecconomic Affairs). அரசாணையிடுவது: கூட்டுறவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம். CACP குழு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், வேளாண் பல்கலைக்கழகங்கள், DES-பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்ககம், வேளாண்துறை, சர்க்கரைத்துறை, சர்க்கரை உற்பத்தியாளர்கள் SISMA & ISMA, Stake holders. ஆகியோரிடம் கருத்துரு கேட்டு தொகுத்து ஆய்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.
இதில் விவசாய அமைப்புகளின் கருத்தை CACP பெரிதாக கருத்தில் கொள்வதாக கருத முடியாது. Dr.P.A.ஹக் CACP தலைவராக இருந்தபோது அதிகம் கரும்பு விளையும் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து, விவசாய அமைப்புகளின் கருத்தறிந்து மத்திய அரசுக்கு SMP (Statutary Minimum Price) பரிந்துரை செய்யும் நிலை அன்றிருந்தது. கரோனா தொற்று வந்ததாலோ என்னவோ கடந்த 6 மாத காலமாக எவ்வித கலந்துரையாடல் கூட்டமும் CACP நடத்தி விவசாயிகள் கருத்தறியவில்லை. பல பொதுத்துறை- கூட்டுறவு துறை- தனியார் துறை சர்க்கரை ஆலைகள் அறவையை நிறுத்தி கொள்ளும் நிலை உருவாகிவிட்டது.
எனவே FRP-யை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு ஊக்கத்தொகையை கடந்த மூன்று பருவங்களாக அறிவித்தாலும், உற்பத்தி செலவு உயர்வை ஈடுகட்டும் வகையில் அது இல்லை. சர்க்கரை உபயோகத்தை பொறுத்தவரை நுகர்வோர் நேரடி பயன்பாடு 10%. மீதமுள்ள 90% சர்க்கரையை குளிர்பான நிறுவனங்கள், சாக்லெட் கம்பெனிகள், பிஸ்கட் தயாரிப்பாளர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், ஸ்வீட் ஸ்டால்கள், பேக்கரி கடைகள், ஹோட்டல்கள் தான் பயன்படுத்துகின்றன. அவர்கள் பயன்பாட்டுக்கான சர்க்கரையை கிலோ ரூபாய் 32.50 என்று நிர்ணயத்தது ஏன்? குறைந்தபட்சம் ரூபாய் 50 என்று நிர்ணயம் செய்தால்தான் கரும்புக்கு நிலுவையில்லாமல் அதிக விலை வழங்க முடியும். விவசாயிகள் பலன் பெற முடியும்.
இக்கருத்தை CIFA வின் சார்பில் CACP யிடமும், தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்களிடமும் பன்முறை எடுத்துக்கூறியும் மாற்றம் வரவில்லை. அவர்கள் எவரும் ஏற்கவில்லை. உள்நாட்டுப் பயன்பாட்டுக்கான சர்க்கரை, ஏற்றுமதிக்கான சர்க்கரை, கையிருப்புக்கான சர்க்கரை போக மிகுதியான கரும்பு பாகை நேரடி எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தினால் மட்டுமே கரும்பு விவசாயமும், சர்க்கரைத் தொழிலும் நிலைக்கும். இல்லையேல் சர்க்கரை ஆலைகளுக்கு படிப்படியாக மூடுவிழாதான். எனவே தற்போது கரும்பு விவசாயிகள் கரையேற வேண்டுமானால் தமிழக அரசு கரும்புக்கு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூபாய் 300 வழங்க வேண்டும். இல்லையேல் பாதிப்பு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்." இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.