கரூர் மாநகராட்சிக்கு உட்பட ஜவகர் பஜாரில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் எதிரில் ஒரு கடை உள்ளது. இந்தக் கடைக்கு இன்று காலை திடீரென கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வந்தார். அவருடன் அங்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிலரும் வந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
ஆட்சியரும், அதிகாரிகளும் அந்தக் கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் ஏராளமாக இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஏற்கனவே கரூர் மாவட்டத்தில், இப்படி சோதனையில் ஈடுபட்டதில் ஐந்து சில்லறை விற்பனைக் கடைகள் சிக்கின அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மொத்த விலைக் கடை பற்றி தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இங்கு சோதனை மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது என்றனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், “தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிய மாவட்ட நிர்வாகம் சார்பாக வருவாய்த்துறை, காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் சோதனையில் கடைகளுக்கு சீல் வைப்பதோடு உரிமமும் ரத்து செய்யப்படும். உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.