மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் மட்டுமின்றி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அதை கலைஞரின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சேலம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். இந்தமுறை கூட்டணி அமைப்பதிலும், கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என எல்லாவற்றிலும் ஆரம்பத்தில் இருந்தே திமுக படு சுறுசுறுப்பாக செய்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 17) மாலையில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த 23 மணி நேரத்திற்குள்ளாகவே, சேலம் தொகுதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையும் ஜெட் வேகத்தில் நடத்தி முடித்திருக்கிறது திமுக. சேலத்தில் திங்கள்கிழமை (மார்ச் 18, 2019) மாலையில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்து, எஸ்.ஆர்.பார்த்திபனை அறிமுகப்படுத்தினார்.
முக்கிய தோழமைக் கட்சியான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ, மதிமுக, ஐயுஎம்எல் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளையும் இக்கூட்டத்தில் பங்கெடுக்கச் செய்திருந்தது, சேலம் மத்திய மாவட்ட திமுக. மிகக்குறுகிய காலத்தில் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து முடித்ததோடு, கூட்டம் நடந்த திருமண மண்டபத்தில் அமர இடம் போதாத அளவுக்கு கூட்டத்தையும் திரட்டி இருந்தார் எல்எல்ஏ ராஜேந்திரன். கூட்டணி கட்சி நிர்வாகிகள் எல்லோருமே திமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவதாக உறுதி அளித்தார்கள். அதே மேடையில் இக்கூட்டத்திற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்தும் சிலாகித்து பேசினார்கள்.
திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் பேசுகையில், ''தமிழ்நாட்டில் நடப்பது ஒரு கேடுகெட்ட ஆட்சி. பாஜகவும், மக்கள் விரோத ஆட்சியைத்தான் நடத்தியது. 480 ரூபாய்க்கு விற்ற காஸ் சிலிண்டர், இன்றைக்கு 1050 ரூபாயாக உயர்ந்து விட்டது. நீட் தேர்வைக் கொண்டு வந்து, தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை முடக்கி விட்டது பாஜக. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏராளமான சிறு,குறு தொழில்கள் அடியோடு முடங்கி விட்டன. இப்படி எல்லா வகையிலும் நாட்டையே குட்டிச்சுவராக்கிவிட்ட பாஜக எப்படி இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும்?
சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு சொந்த மாவட்டம் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று நம் கட்சிக்காரர்கள் கூட சிலர் இங்கே பேசினார்கள். ஒருமுறை பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, வாக்காளர்களுக்கு 5000 ரூபாய் பணம் கொடுத்தார். ஆனாலும் அவர் அந்த தொகுதியில் தோற்றுப்போனார். அதுபோலதான் இப்போதும் நடக்கப் போகிறது. எடப்பாடி அரசை தூக்கி எறிய வேண்டும் என்று எப்போதோ முடிவு செய்துவிட்டார்கள்.
அதிமுக வைத்திருப்பதெல்லாம் மெகா கூட்டணியா? அந்த கூட்டணியில் ஒரு கட்சியின் பொறுப்பாளராக உள்ள ஒருவர், மணப்பெண் என்றால் பத்து பேர் வந்து பெண் கேட்கத்தான் செய்வார்கள் என்கிறார். அதில் தவறு இல்லை. ஆனால் ஒரு மணப்பெண் பத்து வீட்டுக்குப் போய், என்னை கல்யாணம் செய்து கொள் என்று கெஞ் சுவதுதான் கேவலம். அதைத்தான் அந்த பெண்மணி செய்தார்.
கடந்த தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று சொல்லி போட்டியிட்ட பாமகவால் 5.4 சதவீத ஓட்டுகள்தான் பெற முடிந்தது. அதிமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிவிட்டு அவர்களிடமே கூட்டணிக்காக கைகுலுக்கி, தரக்குறைவான கேடுகெட்ட செயலைச் செய்கின்றனர். மக்கள் அவர்களை நிர £கரிப்பார்கள்.
ராகுல்காந்தி வருகைக்குப் பிறகு தமிழகத்தில் திமுக&காங்கிரஸ் கூட்டணி அலை இருப்பதாக உளவுத்துறை சொல்கிறது. நிச்சயம் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். 2011 சட்டமன்ற தேர்தலின்போது நான் ஒரு ரூபாய்கூட காசு செலவழிக்காமல்தான் வெற்றி பெற்றேன். ஆனால், என்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக தலைவர் ஜி.கே.மணி, ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுத்தும் தோற்றார். அதுதான் இப்போதும் நடக்கப் போகிறது. ஸ்டாலின்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
மேட்டூர் எம்எல்ஏவாக இருந்தபோது மக்கள் நலனுக்காக 54 போராட்டங்களை நடத்தினேன். அதில் 50 போராட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறேன். பட்டா மாறுதலுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினேன். பிச்சை மூலம் கிடைத்த 3 லட்சம் ரூபாயை அதிகாரிகள் வாங்க மறுத்ததால், அதை அப்போதைய கலெக்டர் மகரபூஷணத்திடம் கொடுப்பதற்காகச் செல்ல இருந்தேன். இதையறிந்த கலெக்டர் என்னை தொடர்பு கொண்டு, எல்லோருக்கும் பட்டா மாறுதல் செய்து தருவதாக கூறினார். அப்படி ஒரு நாளில் 3000 பேருக்கு இலவசமாக பட்டா மாறுதல் பெற்றுக் கொடுத்தேன்.
திமுக தலைவர் கலைஞர் மறைந்தபோது, அவருடைய உடலை நல்லடக்கம் செய்ய அண்ணா சமாதி அருகே இடம் இல்லை என்று மறுத்தவர்தான் எடப்பாடி. அண்ணாவுக்கு அருகில் இடமில்லை என்ற எடப்பாடிக்கு சேலத்திலும் இடமில்லை என்று இந்த தேர்தலில் மக்கள் சொல்வார்கள். மக்களவை தேர்தலில் சேலம் மட்டுமின்றி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அந்த வெற்றியை நாம் கலைஞரின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார்.
தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திரகுமார், கந்தசாமி, திமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், கலையமுதன், ஜி.கே.சுபாசு, கார்த்திகேயன், தாமரை கண்ணன், லதா சேகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.