புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதேபோல் கலை-அறிவியல் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பல்வேறு குளறுபடிகள் காரணமாக மாணவர் சேர்க்கையில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது.
அதனால் சேர்க்கை பாதியில் கைவிடப்பட்டு நேரடி கலந்தாய்வு பிள்ளைச்சாவடி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கலந்தாய்வு அரங்கில் நடத்தப்பட்டது. இதிலும் பல்வேறு குழப்பங்கள் நீடித்த நிலையில் 26ஆம் தேதி ஒருங்கிணைந்த கலந்தாய்வு நடைபெற்றது. காலை 9 மணிக்கு துவங்கிய கலந்தாய்வு இரவு 9 மணி வரை 12 மணி நேரம் நீடித்தது. ஆனால் பெரும்பாலான மாணவர்களுக்கு தாங்கள் கேட்ட கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என மாணவர்களும், பெற்றோர்களும் குற்றம் சாற்றி அதிகாரிகளுடன் மாணவர்களும் பெற்றோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து காலாப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் அதிகாரிகள் கேட்டு கொண்டதற்கிணங்க பெற்றோரும் மாணவர்களும் கலந்தாய்வு கலைந்து சென்றனர். புதுச்சேரியில் இருக்கும் மாணவர்கள் தங்களுக்கு காரைக்கால், மாஹே , ஏனாம் பகுதிகளில் இடம் ஒதுக்கியதால் போராட்டம் நடத்தியதாகவும் , புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளிலேயே இடம் ஒதுக்கவும் கேட்டுக்கொண்டனர்.