இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று (09.01.2023) ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிகழ்வில் அரசு கொடுத்திருந்த உரையில் சில வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக முதல்வர் உரையாற்றிக்கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் வெளியேறியதும் சர்ச்சையானது.
நேற்று திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநருக்கு எதிராகக் கோஷமிட்டு பேரவையை விட்டு வெளியேறினர். இந்நிலையில் இன்று கோவை காந்தி நகர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுகிறார் என கோஷமிட்டு சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவியின் உருவப்படம் எரிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் 30க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.