Skip to main content

‘’வலுவான லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்’’- திருமாவளவன்

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
thiru

 

லோக் ஆயுக்தா சட்டத்தை வலிமையானதாக மாற்றிடுக என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்த அவரது அறிக்கை: ’’தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக லோக் ஆயுக்தா சட்டத்தை அவசரம் அவசரமாக நிறைவேற்றியுள்ளது. ஆனால், அந்த சட்டம் ஊழலைக் கட்டுப்படுத்தக் கூடிய வலிமை பெற்றதாக இல்லை. எனவே,  அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கும் விதத்திலே இந்த சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து வலிமையானதாக ஆக்க வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 


லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் முதலமைச்சர், சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர் ஆகிய மூவரோடு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஊழல் ஒழிப்பு பணியில் அனுபவம் வாய்ந்தெஒருவரை நியமிக்கும் விதமாக திருத்தம் செய்யப்பட வேண்டும். இந்த லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பின் கீழ் முதலமைச்சர், உள்ளாட்சி அமைப்புகளின்  பிரதிநிதிகள் ஆகியோரும் உள்ளடக்கப் பட வேண்டும். ஒப்பந்தப் பணிகள், பணி நியமனங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த விசாரணையின் கீழ் வரும் என்ற திருத்தம் செய்யப்பட்டு இந்த சட்டத்தை வலுப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


இந்தியாவிலேயே ஊழல் மலிந்த மாநிலம் என்ற அவப்பெயர் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. குட்கா ஊழல், சத்துணவு முட்டை ஊழல் என அடுக்கடுக்காக முறைகேடுகள் வெளிப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும் என்றால் வலுவான லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

 

 மத்திய அரசு சார்பில் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகளான பின்னரும் இதுவரை அதற்கான அமைப்பை உருவாக்கவில்லை. மத்திய அரசைப் போல சாக்குப் போக்குச் சொல்லாமல் தமிழக அரசு லோக் ஆயுக்தாவை விரைந்து அமைத்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.’’’
 

சார்ந்த செய்திகள்