கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்துள்ள இறையூரில் ஸ்ரீஅம்பிகா தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. திட்டக்குடி, பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்த கரும்புகளை இங்கு அரவைக்காக கொண்டு வருவது வழக்கம்.
அப்படி அரவைக்காக கொடுத்த கரும்புகளுக்கான தொகையை கடந்த 2013 முதல் 2017 வரை ஆலை நிர்வாகம் கொடுக்கவில்லை. மேலும் விவசாயிகளின் பெயரில் சுமார் 150 கோடிக்கும் மேல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆலை நிர்வாகம் கடன் பெற்று அதனையும் கட்டவில்லை. அதனால் வங்கிகள் கடனை கட்ட வேண்டும் என விவசாயிகளை நிர்ப்பந்தப்படுத்தியது. இதனால் விவசாயிகள் அவ்வப்போது சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக சர்க்கரை ஆலை மூடப்பட்டது. இருப்பினும் விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. அதேசமயம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்தாததால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கூட்டமைப்பு ஆலையை கையகப்படுத்தி ஆலையில் இருந்து வரவேண்டிய பாக்கி தொகையை டெல்லியை சேர்ந்த அனுராகோயல் என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கியது.
அதிலிருந்து ஆலை வளாகத்திற்குள் இருந்த குடியிருப்பில் குடியிருந்துவந்த ஆலை தொழிலாளர்களின் குடும்பங்கள் குடியிருப்பு வளாகங்களிலிருந்து காலி செய்ய வேண்டும் என நிர்ப்பந்தம் படுத்தப்படுவதுடன் அங்கு வழங்கப்பட்டுவந்த மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளையும் துண்டித்தது. இதனால் கடந்த 6 மாதமாக குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த 64 குடும்பங்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நிறுவனத்தின் சார்பில் அதனுடைய ஆடிட்டர் சீனிவாச நாராயணன் என்பவர் நேற்று சர்க்கரை ஆலைக்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினருடன் சீனிவாச நாராயணனின் காரை முற்றுகையிட்டு தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தங்களுக்கு வழங்க வேண்டிய இரண்டு ஆண்டு சம்பள பாக்கி தொகை அனைத்தையும் வழங்க வேண்டும், தங்கள் குடியிருப்புகளுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, சீனிவாச நாராயணனை பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் திட்டக்குடி வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.