மனித இனத்திற்கு சவாலாய் தனது அபாயத்தை காட்டி அச்சுருத்தி வரும் கரோனா வைரஸால் உலகமே முடங்கிப் போய் உள்ளது. அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இத்தாலியின் வீதிகள் மட்டும் வெறிச்சோடவில்லை. தமிழகத்தின் வீதிகளும் அதே நிலைக்கு போகிறது. ஒரு எடுத்துக்காட்டாக,
ஈரோட்டில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதி என்றால் அது நேதாஜி தினசரி மார்க்கெட் அமைந்துள்ள ஆர்கேவி ரோடு தான். அதிகாலை 3 மணி முதல் இரவு பதினோரு மணி வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வார்கள் .ஒரு நாளைக்கு 2 லட்சம் பேர் இந்தப்பகுதியில் வருவதும் போவதுமாக இருப்பார்கள். சிறிய ஜவுளிக்கடை முதல் மிகப் பெரிய ஜவுளி கடைகள், நகைக் கடைகள் மற்றும் காய்கறி சந்தை என அனைத்து பொருட்களும் இங்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்களை வாங்குவதற்காக தான் ஈரோடு நகர் மட்டுமில்லாமல் ஈரோட்டைச் சுற்றியுள்ள முப்பது நாற்பது கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மக்களும் இங்கு வந்து தினசரி பொருட்களை வாங்கிச் செல்வார்கள். அப்படிப்பட்ட இந்த ஆர்கேவி ரோடு இன்று காலை மற்றும் மாலை மிகவும் வெறிச்சோடி கிடந்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள் நடமாட்டம் இருந்தது. நேதாஜி தினசரி சந்தையில் காய்கறி கடைகள் திறந்திருந்தன ஆனால் மக்கள் யாரும் வரவில்லை. இன்று அதிகாலையில் பலர் காய்கறி வாங்கி சென்றனர். அதன் பிறகு மாலை வரை வெறிச்சோடிக் கிடந்தது. ஏதோ ஒருவித மயான அமைதிபோல் இந்த விதிகள் காட்டியது. இப்படித்தான் தமிழகத்தின் பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை மனித நடமாட்டமற்ற பகுதியாக அந்த வீதிகள் மாறிவருவது சற்று வேதனையாகத்தான் உள்ளது.