பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை எதிர்த்தும், காவல்துறையினரைக் கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை - சேலம் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்திற்கு யார் எதிர்ப்புக் குரல் தெரிவித்தாலும் அவர்களின் குரல்வளையை நெறிக்கும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமியின் காவல்துறை இறங்கியுள்ளது. ஏற்கனவே இத்திட்டத்தை எதிர்த்து பரப்புரை செய்ததாக நடிகர் மன்சூர் அலிகான், மாணவி வளர்மதி, சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில நாள்களுக்கு முன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடினர். அவர்கள் பசுமைவழி விரைவுச்சாலை அராசணை நகலை எரிக்க முயன்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 44 பேரை கைது செய்த காவல்துறை, யாரும் எதிர்பாராத வகையில் அவர்களை சிறையிலும் தள்ளியது. நேற்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கேட்டு, அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாநகர காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இதையடுத்து தடையை மீறி, அந்த அமைப்பின் மாநில துணைச்செயலாளர் பாரதி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திடீரென்று அவர்கள், காவல்துறையினரின் போக்கைக் கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
''சேலம் மாநகரில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தக்கூட விடாமல் காவல்துறையினர் கைது செய்வது என்பது சர்வாதிகார போக்கிற்கு உதாரணம். காவல்துறையினரை குவித்து நடத்தப்படும் இதுபோன்ற கைது நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்,'' என்று இளைஞர் பெருமன்றத்தினர் கூறினர். கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று இரவு 6.50 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.