தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" எனும் பாடலை கடந்த 17-ம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்ததோடு அந்த பாடல் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுஅமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். மேலும் இசைத்தட்டுக்களை கொண்டு இசைப்பதைத் தவிர்த்து கண்டிப்பாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும். அதேவேளையில் மாற்றுத்திறனாளிகளைத் தவிர்த்து மற்றவர்கள் கண்டிப்பாக எழுந்து நிற்க வேண்டும் என நெறிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், தமிழ்ச்சங்கங்களும், பொதுமக்களும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கும் நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வசிக்கும் மனோன்மணியம் சுந்தரனாரின் மகன் பி.எஸ்.நடராஜபிள்ளையின் மகள் மனோகரத்தின் மகனான பேரன் பேராசிாியர், முனைவர் எஸ்.மோதிலால் நேரு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நக்கீரன் இணையதளம் வழியாக நன்றியும், மகிழ்ச்சியும் தொிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நம்மிடம் கூறும்போது, திருவிதாங்கூரின் துறைமுக பட்டணமான ஆலப்புழையில் 1855 ஏப்ரல் 5-ம் தேதி பிறந்த சுந்தரனார் பள்ளிப்படிப்பை ஆலப்புழையில் தமிழ் பாடசாலையில் துவங்கினார். இலக்கியங்களில் காணப்படும் கடவுள் வாழ்த்து பாடலுக்கு பதிலாக இயற்கையை வணங்கினார் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள். அந்த சேர நாட்டைச் சார்ந்த மனோன்மணியம் சுந்தரனார் தமிழ் மொழியைத் தாயாக வணங்கி தமிழ்த்தாய் வணக்கம் பாடலை பாடினார். இலக்கியங்களில் முதல் முறையாக தமிழை அல்லது ஒரு மொழியைத் தெய்வமாக வணங்கும் பாடலை எழுதியவர் மணோன்மணியம் சுந்தரனார். இதன் சிறப்பை உணர்ந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் 1970 மார்ச் 11-ம் தேதி தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இறைவணக்கம் என்பது தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்குமென்றும் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" பாடலை வாழ்த்து பாடலாக அறிவித்தார். அதோடு நெல்லை பல்கலைக்கழகத்துக்கு மனோன்மணியம் சுந்தரனார் என பெயர் வைத்தவர், மனோன்மணியம் சுந்தரனாரின் பாடல் ஒரு மொழி வாழ்த்துப் பாடல் மட்டுமே அதற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடவில்லை என்று பலசர்ச்சைகள் வந்த வேளையில், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தந்தையார் எடுத்த முடிவுக்கு மகுடம் சூட்டும் விதமாக சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில பாடலாக அறிவித்து அதற்கு சில முக்கிய நெறிமுறைகளையும் வகுத்திருப்பது மனோன்மணியம் சுந்தரனாரின் பெயர் காலம் கடந்தாலும் நிலைத்து நிற்கும் அளவுக்கு செய்துவிட்டார்.
அந்த பெருமையை கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனோன்மணியம் சுந்தரனாரின் பேரன் என்ற முறையில் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.