Skip to main content

சபாநாயகர் அரங்கேற்றிய சட்டமன்றப் பயங்கரவாதம்!அரசியல் சாசனத்துக்கு எதிரான படுபாதகம்! வேல்முருகன்

Published on 18/09/2017 | Edited on 18/09/2017

சபாநாயகர் அரங்கேற்றிய சட்டமன்றப் பயங்கரவாதம்!
அரசியல் சாசனத்துக்கு எதிரான படுபாதகம்! 
வேல்முருகன் கண்டனம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 அதிமுக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்தனர். “நாங்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். அவரை மாற்ற வேண்டும். அவருக்கு கொடுத்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்கிறோம்” என்று கையெழுத்திட்ட கடிதங்களை ஆளுநரிடம் அளித்தனர்.

அந்த நிமிடமே எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது. அதனால் உடனடியாகவே பெரும்பான்மையை நிரூபிக்க பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

இதனால் எதிக்கட்சித் தரப்பினர் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.

அதற்கும் ஆளுநர் அசைய மறுக்கவே தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட           19 எம்எல்ஏக்கள் மீண்டும் அவரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தினர்.  ஆனால் சட்டப்படியான இந்தக் காரியத்தைச் செய்யாமல் நாட்களைக் கடத்தினார். ஆளுநர்  ஏன் இப்படி அவர் நாட்களைக் கடத்துகிறார் என்பது புரியாமல் இல்லை. அந்த 19 எம்எல்ஏக்களில் ஜக்கையன் என்பவர் மீண்டும் எடப்பாடி பக்கம் போய்ச் சேர்ந்தார். குதிரை பேரம் நடந்திருப்பதை தமிழக மக்கள் அறிந்தனர்.

ஆனாலும் மீதி 18 எம்எல்ஏக்களும் கர்நாடகா சென்று அங்கு தங்கியிருந்தனர். தமிழக காவல்துறையினர் அங்கு சென்று எடப்பாடியின் பக்கம் வந்துவிடுமாறு அவர்களை மிரட்டியதும் செய்தியானது.

இந்த 18 எம்எல்ஏக்களை இழுக்க முடியாத நிலையில்தான், கட்சி தாவியதாக அவர்களை இன்று பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் சபாநாயகர்.  ஏற்கனவே சபாநாயகர் அவர்களிடம் விளக்கம் கேட்டு 14ந் தேதி வரை கெடு விதித்திருந்தார். வெற்றிவேல் எம்எல்ஏ மட்டும் சபாநாயகரை சந்தித்து விளக்கமளித்தார். மற்ற எம்எல்ஏக்கள் யாரும் அவரை சந்திக்கவில்லை.

இந்தப் பதவிநீக்கத்துக்கு ஆளுநர் அரசியல் சாசனப்படி நடந்துகொள்ளாதுதான் முழுமுதற் காரணம். அவர் அப்படி நடக்கக் காரணம் முழுக்க முழுக்க மோடி அரசின் கைப்பாவையாகிப் போனதுதான்.

பெரும்பான்மை இழந்த எடப்பாடி அரசு நீடிப்பதே சட்டவிரோதம். அப்படி இருக்கையில் சபாநாயகரின் இந்த நடவடிக்கையும் சட்டவிரோதம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவரது இந்தப் படுபாதகச் செயல் சட்டமன்றப் பயங்கரவாதமாகும்.  பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் ஒரு ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி மன்னிக்க முடியாத மக்கள் துரோகச் செயலைப் புரிந்திருக்கிறது எடப்பாடி அரசு.

மோடி அரசு மற்றும் மகாராஷ்டிர ஆளுநர் துணையில் எடப்பாடி அரசின் சபாநாயகர் அரங்கேற்றிய இந்தப்படுபாதக சட்டமன்றப் பயங்கரவாதத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.’’

சார்ந்த செய்திகள்