தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழையானது பெய்து கொண்டே இருக்கிறது. பொதுவாக, சென்னை மாநகரில் மிதமான மழை பெய்தாலே முக்கியச் சாலைகளில் மழைநீர் கடுமையாக தேங்கியிருக்கும். மேலும், மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கும் அளவிற்கு சென்னை முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஆனால், கடந்தாண்டு தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை. இதற்கு முன்னர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தாண்டு பாதிப்பில்லை என்று பொதுமக்கள் பாராட்டும் அளவிற்கு சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளைத் திறம்பட செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் முகாமிட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் வெளியேற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றனர். மாநகராட்சியில் பணியாற்றும் 20 ஆயிரம் ஊழியர்கள் காலநேரம் பார்க்காமல் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு சென்னை மாநகராட்சிக்கு தெற்கு ரயில்வே பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை தெற்கு ரயில்வே கோட்டத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சென்னை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறையின் ஒரு வருட கூட்டு முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. மழைநீர் தேங்காதபடி மேற்கொண்ட நடவடிக்கையால் வழக்கமான வேகத்தில் ரயில்கள் சீராக இயக்கப்படுகிறது. இதேபோல் மற்ற ரயில் நிலையங்களிலும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.