நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் 23- ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. உயர்நீதிமன்ற வழக்குகளில் பிறப்பித்த உத்தரவு காரணமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் உள்ளது.
நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார். சங்கம் செயல்படவில்லை எனக் கூறி நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐ.ஜி.யாக உள்ள கீதாவை நியமித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
தபால் வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இந்தத் தேர்தல் நடத்தப்பட்டிருப்பதால் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கக் கோரி நடிகர்கள் பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகியோரும் வழக்கு தொடர்ந்தனர். நடிகர் சங்க வழக்குகள், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்னிலையில் 36 -வதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.