தேனியில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பாம்புகளை வைத்துக்கொண்டு நடனமாடிய இளைஞரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஐந்து பாம்புகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அடுத்துள்ள முத்துதேவன்பட்டி பகுதியில் அண்மையில் கோவில் திருவிழா ஒன்றில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் ஆபத்தான வகையில் நாகப்பாம்பு மற்றும் சாரைப்பாம்புகளை வைத்துக் கொண்டு நடனம் ஆடினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வனத்துறைக்கு சமூக ஆர்வலர்களால் அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு புகார்கள் குவிந்தது.
இதனையடுத்து தேனி மாவட்ட வனத்துறையினர் வீடியோவை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாம்புகளுடன் நடனமாடிய இளைஞர் தேனி வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த முகில் வண்ணன் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த வனத்துறையினர் அவரிடம் இருந்து மூன்று நாகப்பாம்புகள் இரண்டு சாரைப்பாம்பு என மொத்தம் ஐந்து பாம்புகள் பறிமுதல் செய்தனர். பாம்புகள் அனைத்தும் பல் பிடுங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட முகில் வண்ணனிடம் வனத்துறையினர் விசாரணை செய்த போது சிறுவயதில் இருந்தே பாம்பு பிடித்து வந்த நிலையில் அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காக ஆடல் பாடல் குழுக்களிடம் சேர்ந்து கொண்டு மேடையில் பாம்புகளை வைத்து நடனமாடி வந்தது தெரிய வந்தது. அது மட்டுமல்லாமல் சில ஆடல் பாடல் குழுவினருக்கு பாம்புகளை வாடகைக்கு விட்டு வந்ததும் தெரிய வந்தது. தற்போது கைது செய்யப்பட்ட முகில் வண்ணன் தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகள் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.