மது போதை மனிதர்களை என்ன பாடுபடுத்துகிறது?
“ரிலாக்ஸுக்காக பாருக்குச் செல்கிறோம். சின்னதா ஒரு கட்டிங்தான். இதெல்லாம் உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது” என்று கூலாகச் சொல்லும் அனேகம் பேரை பார்த்திருப்போம்.
சிவகாசி – ரிசர்வ் லயன் – வசந்தம் நகரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனோ, கடந்த ஞாயிற்றுக்கிழமை (18-ஆம் தேதி), திருத்தங்கல் பிரைவேட் பார் ஒன்றில் மது அருந்தியபோது, அரவிந்தன் என்பவரோடு பிரச்சனை ஏற்பட்டு, கைகலப்பில் இறங்கிவிட்டார். தனக்கு விழுந்த அடியை ஒரு அவமானமாகக் கருதிய அரவிந்தன், தன் நண்பர்களுடன், இன்று (21-ஆம் தேதி) நவநீதகிருஷ்ணன் வீட்டுக்கே போய் தாக்கியதோடு, அவரை டூ வீலரில் கடத்திச் சென்று, பக்கத்து கிராமமான எஸ்.புதுப்பட்டி பகுதியில் வைத்து கொலை செய்து, உடலை வீசிவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
பார் தகராறால் கொலை செய்யப்பட்டு இறந்துபோன, கட்டிடத் தொழிலாளியான நவநீதகிருஷ்ணனுக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். 31 வயது இளைஞரான நவநீதகிருஷ்ணனின் குடிப்பழக்கமும், போதையின்போது வெளிப்பட்ட மூர்க்கத்தனமும், உயிரைப் பறித்து, அவருடைய குடும்பத்தினரை நிர்க்கதியாக்கிவிட்டது. அதே குடிப்பழக்கம், தலைமறைவாகிவிட்ட அரவிந்தனையும் அவருடைய மூன்று நண்பர்களையும் கொலையாளிகள் ஆக்கி, எதிர்காலத்தை சூனியமாக்கிவிட்டது.
சிவகாசி டவுண் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.