தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 'சிற்பி' திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் திட்டமாகும்.
இந்நிலையில் இன்று இத்திட்டத்தின் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் முன்னிலையில் பேசுகையில், “இந்தியாவில் எல்லாவற்றிலும் நம்பர் 1 தமிழ்நாடு என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து கொண்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக கல்வித்துறையில் மகத்தான சாதனையை செய்து வருகிறோம். அதில் ஒரு முக்கியமான சாதனை என்னவென்றால் காலை சிற்றுண்டி திட்டம். இதை நான் பெருமையாக சொல்லுவேன். பசியோடு படிக்க வருகிற குழந்தைகளுக்கு முதலில் உணவு. அப்புறம் தான் வகுப்பறை என்று சொல்லும் திட்டம் தான் காலை சிற்றுண்டி திட்டம். வயிற்றுப்பசியை போக்கிவிட்டாலே மாணவர்களின் அறிவுப்பசிக்கு உணவு கிடைத்துவிடும். இதனை மனதில் வைத்து தான் காலை சிற்றுண்டி திட்டத்தை உருவாக்கினோம்.
அதே போல இல்லம் தேடிக் கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், பள்ளி மேலாண்மை குழுக்கள், பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிய செயலி, சிறப்பு கவனம் தேவைப்படக்கூடிய குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித்தாள்களுடன் கூடிய பயிற்சிப்புத்தகங்கள், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள், மாணவர் மனசு என்ற ஆலோசனை பெட்டி, கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, உயர் தொழில் ஆய்வகங்கள், வகுப்பறை உற்று நோக்கல் செயலி, மின் ஆசிரியர் என்ற உயர்தர செயலி ஆகிய திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தி வருகிறோம்.
இந்த வரிசையில் தான் சிற்பி என்ற திட்டத்தை சென்னை காவல்துறை திட்டமிட்டது. இதனை நான்தான் தொடங்கி வைத்தேன். நன்றாக படிக்கின்ற மாணவர்களை ஒழுக்கத்திலும், துணிச்சலிலும், சமூக பொறுப்பிலும் சிறந்தவர்களாக உருவாக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வடிவமைத்தது தான் இந்த சிற்பி திட்டம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
சமூகத்தை படியுங்கள். அந்த கல்வியின் மூலம் பகுத்தறிவையும் சுயமரியாதையையும் வளர்த்துக்கொள்ளுங்கள். அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். அந்த படிப்பை வைத்து சிந்தியுங்கள். புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துங்கள். படிப்பு மட்டும் தான் உங்களிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து. உங்களின் படிப்பையும் திறமையையும் பார்த்து பெரிய பெரிய நிறுவனங்கள் அழைத்து வேலை கொடுக்கும். நீங்களும் தொழில் தொடங்கி நிறைய பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். உங்களின் மற்ற கவலைகளைப் போக்கவும், மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யவும் திமுக அரசு இருக்கிறது. நான் இருக்கிறேன். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படக்கூடாது. படிக்கும் காலத்தில் வேறு எதைப்பற்றியும் கவனச்சிதறல் இருக்கக்கூடாது.
இன்றைக்கு போதை ஒழிப்பு நாள். எந்தவிதமான போதைப் பழக்கத்திற்கும் நீங்களும் அடிமையாகக் கூடாது, உங்கள் நண்பரையும் அடிமையாக விடாதீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உங்கள் உடலுக்கும் மட்டுமல்ல, குடும்பத்திற்கும் மட்டுமல்ல, நாட்டிற்கும் எதிர்காலத்திற்கும் போதைப் பழக்கம் மிக மிகக் கேடு. அதனைப் புறந்தள்ளி போதையற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இதனைத்தான் எல்லோருக்கும் நீங்கள் சொல்ல வேண்டும். நீங்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக, நீதி, நேர்மை கொண்டவர்களாக வர வாழ்த்துகள்” எனப் பேசினார்.