Skip to main content

சிஏஏவுக்குஎதிரான “கையெழுத்து இயக்கம்”- படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பு 

Published on 16/02/2020 | Edited on 16/02/2020

 

தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,  “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரும் வகையில், 2020 பிப்ரவரி 2ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) முதல் பிப்ரவரி 8ஆம் தேதி (சனிக்கிழமை) வரை “கையெழுத்து இயக்கம்” நடத்திடுவது என்றும்; அப்படிப்  பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களை,  அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் - குடியரசுத் தலைவரை சந்தித்து அளித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது” என்று 24.1.2020 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

 

CAA

 

மக்கள் இயக்கமான “கையெழுத்து இயக்கத்திற்கு” அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு வழங்கிட வேண்டுமென அனைத்துக் கட்சிகளின்  கூட்டம் வேண்டுகோளும் விடுத்தது.
 

அதனடிப்படையில், தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  அனைத்துக் கட்சித் தலைவர்களும், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் - தோழர்கள், மாநிலம் முழுவதும், மக்கள் கூடும் இடங்களிலும் - வணிக நிறுவனங்களிலும் -  கல்வி நிலையங்களிலும் - வீடுவீடாகவும் சென்று, அனைத்துத் தரப்பு மக்களிடமும்  2020 பிப்ரவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை கையெழுத்து பெற்ற 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82  கையெழுத்திட்ட  படிவங்களை இன்று (16-2-2020), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா,கலைஞர் சிலை அருகில்,  திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய அனைத்துக் கட்சித் தலைவர்கள்  குடியரசுத் தலைவருக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார்கள்.

 

 "Signature Movement" - forms sent to the President of the Republic against the CAA


மாபெரும் மக்கள் இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட இந்த கையெழுத்துக்கள் தமிழக மக்கள் மத்தியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கும் (சி.ஏ.ஏ.) - தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) - தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக உள்ள உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது.

ஆகவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து - இப்போதாவது மத்திய பா.ஜ.க. அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற்றும், என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். தயாரிக்கும் பணிகளை நிறுத்தி வைக்கும் நடவடிக்கைகளை, குடியரசுத் தலைவர்  ஜனநாயகத்தையும்.அரசியல் சட்டத்தையும் பாதுகாத்திடும் வகையில் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்