திண்டுக்கல் மாவட்டம் கோட்டை மாரியம்மன் மாசி திருவிழாவை முன்னிட்டு கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக உணவு கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளில் தயாரிக்கப்படும் உணவு பண்டங்கள் தரம் இல்லாமல் இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் சென்றது.
இதனால் அந்த பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது இரண்டு கடைகளில் அழுகிப்போன காய்கறிகள் மற்றும் பூஞ்சை படிந்த பூண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 48 கிலோ கெட்டுப்போன உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக பூண்டு, காலிபிளவர், உருளைக்கிழங்கு ஆகியவை கெட்டுப்போன நிலையிலும், பூஞ்சைகள் பிடித்த நிலையிலும் உணவு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அப்பொழுது ஒரு கடையில் பூஞ்சை படிந்த பூண்டை கைப்பற்றிய அதிகாரி 'இதை எல்லாம் ஏன் வைத்திருக்கிறீர்கள்? இந்த பூண்டில் எல்லாம் ரசம் வைத்து சாப்பிட்டால் பத்தே நாளில் இறந்து விடுவார்கள்' என எச்சரித்தார்.