Skip to main content

ஒருநாள் உறுதியாய் ஈழத்திலும் புலிக்கொடி பறக்கும்! அடிமை இருட்டின் கீழ்வானம் சிவக்கும்! -சீமான்

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

மே 18, இனப்படுகொலை நாளின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள தலைமையகத்தில் சுடர் வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வு  நடை பெற்றது.

 

இந்த வீரவணக்க நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விடுதலை புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்தது குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது, அதற்கு பதிலளிக்கையில்,

 

SEEMAN MAY18

 

இது வழக்கமாக இந்திய அரசு செய்வதுதான். இதே மாதிரி போன முறை இருந்த காங்கிரஸ் அரசு இதேபோல் தேர்தல் முடியும் நேரத்தில் அவசர அவசரமாக 5 ஆண்டுக்கு தடையை நீடித்துவிட்டு இறங்கியது. அதையே பிஜேபியும் செய்துள்ளது. இந்த தடை நீட்டிப்பு மூலம் உலகத்துக்கு சொல்வது நாங்கள் தடையை நீட்டித்துவிட்டோம் நீங்கள் தடையை நீட்டிக்காமல் தளர்த்துங்கள் என சொல்கிறது எனக்கூறினார்.

 

இந்த வீரவணக்க நாள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம், தமிழீழம் என்கின்ற இரண்டு தாயக நிலங்களை உடையப் பூர்வகுடி மரபினர் தமிழர். தமிழர்களின் பூர்வீக தாய் நாடான தமிழீழ நிலத்தை பல நூற்றாண்டுகளாக சிங்களர்கள் ஆக்கிரமித்து மண்ணின் பூர்வ குடிகளான தமிழர்களை அடிமைத் தேசிய இனமாக வீழ்த்தி சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர மக்களாக நடத்தி வருகின்றனர். கொடுமையான சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்து தமிழர்கள் அகிம்சை வழியில் தந்தை செல்வா தலைமையில் போராடிப் பார்த்தார்கள். ஆனால், சிங்கள வல்லாதிக்கமோ தமிழர்களை அடிமைப்படுத்துவதில், உரிமைகளைப் பறிப்பதில்,நிலத்தை அபகரிப்பதில் முனைப்பாக இருந்து தமிழர்களை அழித்தொழிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தது.

 

SEEMAN MAY18

 

இந்த உலகத்தில் களவற்ற, ஊழல் இலஞ்சமற்ற,அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தாய் மொழியில் அமைந்த,பெண்களுக்குப் பாதுகாப்பும் சம உரிமையும் நிறைந்த ஒரு பொன்னுலகப் பூமியாக தமிழ் ஈழ சோசலிச குடியரசு நாட்டினை என்னுயிர் அண்ணன் நம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் துளித்துளியாக செதுக்கி உருவாக்கினார்கள்.

 

 

இந்திய பெருநாட்டில் எல்லையிலே தமிழர்களின் ஒரு நாடு உருவானால் அது இந்திய நாட்டிற்கு மாபெரும் பாதுகாப்பாக விளங்கும் என்பதை உணர்ந்து கொள்ளத் தவறிய இந்திய அரசியல் தலைவர்கள் சிங்களப் பேரினவாத அரசுடன் இணைந்து கொண்டு தமிழர்களின் கனவு நிலமான தமிழீழ நாட்டினை அழிக்க துணிந்தார்கள்.

 

கடந்த 2009 மே 18 வரை நடந்த இந்தக் கொடுமையான இன அழிப்புப் போரில் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கானப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். மனநோயாளிகளை போல நிர்வாண உடல்களை படமெடுத்து சிங்களப் பேரினவாத அரசு தனது வக்கிரத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படையாக காண்பித்தது.

 

 

நடந்து முடிந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக உலக அரங்குகளில், ஐநா மனித உரிமை அமர்வுகளில் தமிழர்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறோம். ஆனால், நியாயமான எமது குரலை உலக சமூகம் சிறிதளவுகூட மதிக்காமல் சிங்களப் பேரினவாத அரசிற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கி வருவது தமிழ்த்தேசிய இனத்திற்கு உலகச் சமூகம் செய்துவருகிற மாபெரும் அநீதியும்,பெருங்கொடுமையும் ஆகும்.

 

SEEMAN MAY18

 

உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற 12 கோடி தமிழர் என்கின்ற தேசிய இன மக்களின் ஒற்றைக் கோரிக்கையான தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பினை ஐ.நா. மன்றமும், உலகச் சமூகமும் முன்னெடுக்காமல், மெளனமாக இருப்பது இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த சிங்களனின் இனப்படுகொலையை அங்கீகரிக்கிற நடவடிக்கையாகவே தமிழர்களாகிய நாங்கள் கருதுகிறோம்.

 

 

இனப்படுகொலை நிகழ்ந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும்கூட தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. போரின்போது காணாமல் போன, கைது செய்யப்பட்டப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை பற்றிய எந்தத் தகவலையும் சிங்களப் பேரினவாத அரசு அளிக்காமல் கொடும் மௌனம் காத்து வருகிறது. இன்னமும் தமிழர் நிலத்தில் சிங்கள இராணுவத்தினரின் அத்துமீறல்களும், அநீதியான கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

 

இதுபோன்ற நடவடிக்கைகள் சிங்கள இனமும்,தமிழினமும் இலங்கை என்ற ஒற்றை நாட்டிற்குள் இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலையையும், சுதந்திர தமிழ் ஈழ சோசலிசக் குடியரசின் தேவையையும் மீண்டும் மீண்டும் உறுதி செய்து வருகின்றன.

 

 

மே 18, ஒவ்வொரு தமிழனும் மறக்கக்கூடாத ஆழ்மனதில் வஞ்சினம் மேற்கொள்ள வேண்டிய நாளாக அமைந்து இருக்கிறது. இந்த இனப்படுகொலை நிகழ்ந்த நாளில் வீழ்ந்த இனம் வீழ்ந்ததாகவே இருக்கட்டும் என வீழ்த்தியவர்கள் இறுமாந்து இருக்க, அதை முறியடித்து வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்காகவே என்பதைத் தமிழர்கள் தமக்குள்ளாகவே உறுதி செய்து கொள்கின்ற எழுச்சி நாளாக இந்நாள் அமைகின்றது.

 

 

தமிழர்களின் தாய் நிலமான ஈழப் பெரு நிலத்தில் இந்த நாளில்தான் புலிக்கொடி வீழ்த்தப்பட்டது.ஆனால், இன்று அதே புலிக்கொடி உலகமெங்கும் தலைநிமிர்ந்து பறக்கிறது. இன்றல்ல ஒரு நாள். உறுதியாய் ஈழத்திலும் புலிக்கொடி பறக்கும். அடிமை இருட்டின் கீழ்வானம் சிவக்கும். ஈழம் பிறக்கும்.

 

 

வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்!
 

 

 

சார்ந்த செய்திகள்