Skip to main content

சீமான் பேச்சால் பொதுமக்கள் ஆவேசம்... அதகளம் பட்ட விழா மேடை! 

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

Seeman controversial speech


திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்கா பிரம்மதேசம் கிராமத்தில் ராஜேந்திரசோழன் சமாதி உள்ளது. ராஜேந்திர சோழன் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேந்திரசோழன் பெருவிழா ஜுலை 21 ஆம் தேதி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


விழாவினையொட்டி கிராமத்தில் உள்ள தெருக்களில் நாம்தமிழர் கட்சியின் கொடிகளை கட்டவும் விழா மேடை அருகே கொடிகம்பம் அமைக்கவும் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் பொதுமக்களுக்கும் நாம் தமிழர் கட்சி இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 


இதுக்குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில், “ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டும். வரலாறு படித்தால்தான் வரலாறு படைக்க முடியும். வரலாறு என்பது வார்த்தையல்ல, வருங்கால தலைமுறையின் வழித்தடம். பாண்டியர்களுக்கும் சோழருக்கும் இடையே ஏற்பட்ட பகையின் காரணமாக வஞ்சகத்தால் ஆதித்ய கரிகாலன் என்னும் நம் பெரும் பாட்டன் வீழ்த்தப்பட்டார். 


சேர, சோழ, பாண்டியர்கள் சேர்ந்து அடித்து இருந்தால் உலகத்தில் ஒரு நாடும் வேற யார் கையிலும் இருந்திருக்காது. நம்மிடம்தான் இருந்திருக்கும். ஆனால், இது சொந்த ரத்தங்களுக்குள் நடந்த யுத்தம். அதுபோலத்தான், இங்க நம்மள, நம்ம கொடிய ஏற்ற விடமாட்டேங்குறாங்க. இந்த மண்ணின் மகன், மான தமிழ்மகன், ஒரு தமிழ்மகன் ஏற்றும் போது ஏன் வலிக்கிறது?. நான் பறையை தான் அடிச்சேன் உன்ன அடிக்கல. இந்த சேட்டையெல்லாம் வேற எங்காவது வைத்துக்கொள்ளுங்கள். நான் நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே வந்து இங்கிருந்திருந்தால், இங்கே கொடியேற்றாதே, பறை அடிக்காதே எனச் சொல்லி இங்கிருந்து யாரும் தப்பித்து சென்றிருக்க முடியுமா? தேர்தலில் தனித்து நிற்போம் வா. 24ல் நிற்போம்.. 26ல் நிற்போம். இது உங்கள் கோட்டை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் என் கோட்டை. பேரம் பேசி, பெட்டி வாங்கி, சீட்டு வாங்கி, ஓட்டு வாங்கி கட்சி நடத்துபவன் நாங்கள் இல்லை” என கோபத்துடன் மேடையில் சீமான் பேசிக்கொண்டிருந்தபோது அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சீமான் பேச்சு கேட்க, கேட்க ஆவேசமடைந்தனர். (குறிப்பாக சீமான் ஒருமையில் பேசினார். மேலும், மோசமான சொற்களையும் உபயோகப்படுத்தினார்)


அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். வரலாறு சம்பந்தமாக மட்டுமே பேச வேண்டும். இங்கு அரசியல் சார்ந்து எதுவும் பேசக்கூடாது. அதற்கு நீங்கள் அனுமதிக்கக்கூடாது என டி.எஸ்.பி செந்தில் மற்றும் போலீஸாரிடம் பலரும் வாக்குவாதம் செய்தனர். இதனைக் கண்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருதரப்பு இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. பதட்டமான சூழ்நிலையில் இங்கும் அங்குமாக இருதரப்பினரும் கூடி வாக்குவாதம் செய்ததால் போலீசார் அவர்களை சமாதானம் செய்ய துவங்கினர்.  


நேரம் ஆக ஆக பதட்டம் கூடத்தொடங்கியது. சீமான் பேச்சை நிறுத்த வேண்டும் எனக் கிராமத்தினர் வாக்குவாதம் செய்து கூச்சலிட்டுக் கொண்டிருந்த போதிலும், மறுபுறம் சீமான் மேடையில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் விழா மேடையை நோக்கி முன்னேறினர். சீமான் தரப்பினரும் தாக்குதல் நடத்த தயாராகினர். போலீஸ் இருதரப்பையும் தடுத்து விலக்கியனுப்பியது. கிராம இளைஞர்கள் சிலர் விழாவிற்காக வரிசையாக அமைக்கப்பட்டிருந்த மின் அலங்கார லைட்களையும், கொடிகளையும்  உடைத்தனர். அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினரின் கார் கண்ணாடியையும், இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினர். 


இதனால் அங்கு பதட்டம் அதிகரித்தது. இந்நிலையில் திடீரென பெய்த மழை இருதரப்பினரையும் அங்கிருந்து கலைந்து போகச்செய்தது. நேரம் செல்லச்செல்ல மழை அதிகரித்ததால் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சீமான் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அவரை மாவட்ட எல்லை பகுதி வரை செய்யாறு டி.எஸ்.பி செந்தில்  தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.


சீமான் பேச்சால் ஏற்பட்ட உஷ்ணத்தால் ஏற்படவிருந்த பெரும் மோதலை மழை தடுத்து நிறுத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்