தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.