Skip to main content

இழந்த அதிகாரத்தை மீட்க ஒரே நாளில் ஏழு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சசிகலா! 

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

Sasikala who visited seven temples in one day

 

இழந்த அதிகாரத்தை மீட்கவும்,  எதிரிகளை விரட்டி அழிக்கவும் வல்லமை மிக்க தெய்வங்களை தேடி சென்று சாமி தரிசனம் செய்வதோடு, எதிரிகளை அழிக்கும் யாகங்களையும் நடத்திவருகிறார் வி.கே.சசிகலா.

 

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்துவிட்டுப்போன ஆட்சியும் கட்சியும், தான் வந்ததும் தன்னிடம் வந்துவிடும் என்று சிறையில் இருந்தபோதே பல்வேறு கணக்குகள் போட்டு ஆவலோடு காத்திருந்தார் சசிகலா. ஆனால், அவர் நினைத்ததற்கு நேர் எதிராக நிலைமை மாறியது. பலமுறை பல்வேறு வியூகங்கள் அமைத்து கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற எடுத்த முயற்சிகள் அனைத்துமே தோல்வியிலேயே முடிந்துள்ளது. அதற்கான வாய்ப்புகளும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

 

அதிமுகவை கைப்பற்ற ஜெயலலிதா மேற்கொண்டதுபோல ஆன்மீக முயற்சியே சரியானது என அவரது பிரதான ஜோதிடர்கள் கூறியதை தொடர்ந்து, கனவர் நடராஜன் நினைவிடத்திற்கு செல்வது, ராகு கேது பெயர்ச்சியில் கலந்துகொள்வது, பிரத்தியாங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம் செய்வது என திட்டமிட்டு சென்னையில் இருந்து மூன்று நாள் பயணமாக தஞ்சாவூர் வந்தார் சசிகலா. 

 

Sasikala who visited seven temples in one day

 

நடராஜனின் நினைவு நாளான 20ம் தேதி விளார் சாலையில் இருக்கும் நடராஜன் நினைவிடத்திற்கு வந்து உணர்ச்சி பொங்க அஞ்சலி செலுத்தினார். பசுவுக்கு பூஜைசெய்து ஏழு முறை சுற்றி பரிகாரம் தேடினார். அங்கு சசிகலா வருவதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா வந்திருந்தார்.


பயணத்திட்டபடியே 21ம் தேதி ராகு காலம் 7:30 மணிக்கு தொடங்குகிறது என்பதால் அதற்கு முன்பு ஏழு மணிக்கே தஞ்சையில் இருந்து கிளம்பி விட்ட சசிகலா. சரியாக 9 மணிக்கு ராகு காலம் முடிந்த பிறகு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு வந்து பூஜைகள் மற்றும் ஹோமத்தில் பங்கேற்றார். அங்கிருந்து சக்கரபாணிகோயில் ,சாரங்கபாணி கோயில் என கும்பகோணம் நகரத்தை சுற்றி சுற்றி அனைத்து கோயில்களுக்கும் ஏறி இறங்கினார்.


பிறகு அங்கிருந்து புறப்பட்டு சூரியனார்கோயில், சுக்கிரன் தலமான கஞ்சனூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டு ராகு-கேது பெயர்ச்சி நேரமான 3.15 மணிக்கு  திருநாகேஸ்வரம் ராகு கோவிலுக்கு வந்து மக்களோடு, மக்களாக அமர்ந்து சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து அய்யாவாடி கோயிலுக்கு சென்று அங்கு நடந்த யாகத்தில் கலந்துகொண்டு மீண்டும் தஞ்சைக்கு சென்றுள்ளார். 


சசிகலா நேற்று ஒரே நாளில் திட்டமிட்டபடியே ஏழு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருப்பது அவரை சார்ந்தவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்