சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27- ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் கரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 10 நாட்களாக பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று (31/01/2021) காலை 10.00 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பெங்களூருவில் சில நாட்கள் சசிகலா தனிமைப்படுத்திக்கொள்வார் என்றும், பின்பு பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் திரும்புவார் என்று தகவல் கூறுகின்றன.
இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையான சசிகலாவுக்கு கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரை சாலைகளில் உற்சாக வரவேற்பு அளிக்க, அதற்கான ஏற்பாடுகளை அ.ம.மு.க.வினர் செய்து வருகின்றனர்.
அதேபோல், சசிகலாவின் விடுதலையை வரவேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வை சேர்ந்த சிலரும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. கட்சியின் ஆண்டிப்பட்டி ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்ன ராஜா என்பவர் சசிகலாவை வரவேற்கும் விதமாக போஸ்டர்களை ஒட்டி உள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து கொண்டு சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டுபவர்கள் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு அதிமுக நிர்வாகி சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளது, அ.தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.