கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளதாக மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று (23/01/2021) காலை செய்தியாளர்களைச் சந்தித்த விக்டோரியா அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா, "சசிகலாவுக்கு கரோனா தொற்று குறைந்துள்ளது. ஆக்ஸிஜன் அளவு 95% லிருந்து 98% ஆக அதிகரித்துள்ளது. மருந்துகளுக்கு சசிகலாவின் உடல் ஒத்துழைக்கிறது. கரோனா சிகிச்சையில் உள்ள சசிகலா இயல்பாக உள்ளார். வழக்கம் போல் உணவு உட்கொள்கிறார். சுய நினைவுடன் இருக்கிறார்; மிகவும் இயல்பாகவே உள்ளார். சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது.
வேறு மருத்துவமனைக்கு மாற்ற கேட்டார்கள். நாங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அனைத்து வசதியும் இங்கு (விக்டோரியா மருத்துவமனையில்) உள்ளது. 7,500-க்கும் அதிகமான கோவிட் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த அனுபவம் உள்ளது. தற்போது இங்கேயே (விக்டோரியா) சிகிச்சையைத் தொடர சசிகலா தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது" என்றார்.