சேலம் அருகே, கூலிப்படை ரவுடி கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சேலம் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த பச்சியப்பன் மகன் வைரம் என்கிற திருநாவுக்கரசு (வயது 26). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது, அக்கட்சிக்கு கூலிப்படை ரவுடியாக செயல்பட்டு வந்தார்.
திருமணத்திற்குப் பிறகு தனது மனைவி ரம்யாவுடன் சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணத்தில் திருநாவுக்கரசு குடியேறி விட்டார். இந்நிலையில், டிசம்பர் 17- ஆம் தேதியன்று தனது மாமனார் சபரி மலைக்குச் செல்ல இருந்ததால், அவரை வழியனுப்பி வைப்பதற்காக சொந்த ஊரான நாழிக்கல்பட்டிக்குச் சென்றிருந்தார்.
அதே ஊரைச் சேர்ந்த தனது பழைய கூட்டாளியான சரவணன் என்பவருடன் ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, திடீரென்று அவர்களை 15 பேர் சுற்றி வளைத்து கல்லால் தாக்கியும், சூரிக்கத்தியாலும் தாக்கினர். இதில் திருநாவுக்கரசு உயிரிழந்தார். சரவணனுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மல்லூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கடந்த 2019- ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில், அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் திலீப்குமார் என்பவரை திருநாவுக்கரசுவும், அவருடைய கூட்டாளிகளான சரவணன், சூர்யா என்கிற மற்றொரு சரவணன் ஆகிய மூவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தனர்.
இந்தக் கொலைக்கு பழிதீர்க்கும் நோக்கத்தில்தான் தற்போது திருநாவுக்கரசு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை தமிழன்பன் (வயது 35), தங்கவேல் (வயது 34), குமரேசன் (வயது 32) உள்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து, சிறைகளில் அடைத்துள்ளனர். இவர்களில், 17 வயதான இரண்டு சிறுவர்களும் உள்ளனர்.
இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சிவா என்கிற பரமசிவம் (வயது 25), ரஞ்சித்குமார் (வயது 25), விக்னேஷ் (வயது 25) ஆகிய மூவரும் டிச. 22- ஆம் தேதி, சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவரும் ஓமலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநாவுக்கரசு கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும், நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களுள் சிவா என்கிற பரமசிவம்தான் இந்த கொலையில் மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.