Skip to main content

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் கொன்றோம்! சேலம் மாற்றுத்திறனாளி கொலையில் பரபரப்பு பின்னணி!! 

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Salem Physical disable person case police arrested one
                                                         அருணாச்சலம்

 

சேலம் அருகே, மாற்றுத்திறனாளி இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான வாலிபர், ஓரினச்சேர்க்கை உறவுக்கு மறுத்ததால் கல்லால் தாக்கியும், மதுபாட்டிலால் குத்தியும் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

 

சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் அ.நாட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர் மணி (எ) மணிகண்டன் (30). பிறவியிலேயே பேச்சு மற்றும் செவித்திறன் அற்ற மாற்றுத்திறனாளி. கட்டடத் தொழிலாளியான இவர், அக். 3ஆம் தேதியன்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை குள்ளம்பட்டி பிரிவு சாலையில் உள்ள சிறு கரட்டுப் பகுதியில் மணிகண்டன் மேல் சட்டை களையப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். 

 

இதுகுறித்து காரிப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து  தீவிரமாக விசாரித்தனர். மர்ம நபர்கள் அவரை தலையில் கல்லால் தாக்கியும், வயிற்றில் மது பாட்டிலால் குத்தியும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்தில் இருந்து ரத்தம் தோய்ந்த கல்லும், உடைந்த மது பாட்டிலும் கைப்பற்றப்பட்டன.  

 

சடலம், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரியவந்தது. 

 

சம்பவத்தன்று இரவு மணிகண்டன், மோட்டார் சைக்கிளில் வந்த இருவருடன் சென்றதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர். அந்தத் தகவலின்பேரில் விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் குள்ளம்பட்டி அருகே உள்ள பள்ளக்காட்டைச் சேர்ந்த அருணாச்சலம் (25), திருமலை (22) ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களும் வீட்டில் இல்லாமல் திடீரென்று தலைமறைவாகிவிட்டது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் அக். 4ஆம் தேதி இரவு, அருணாச்சலத்தை சந்தேகத்தின்பேரில் பிடித்த காவல்துறையினர், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் நம்மிடம் பேசியது...

 

கொலையுண்ட மணிகண்டன், வேலைக்குச் சென்றுவிட்டு தினமும் இரவு மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மணிகண்டன் வீட்டிலிருந்து குள்ளம்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். 

 

அப்போது அந்த வழியாக அருணாச்சலமும், திருமலையும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்களைப் பார்த்த மணிகண்டன், அவர்களிடம் லிஃப்ட் கேட்டு அவர்களுடன் வண்டியில் ஏறிக்கொண்டார். மூவரும் டாஸ்மாக் சென்று அங்கே மதுபானங்களை வாங்கிக்கொண்டு, அப்பகுதியில் உள்ள கரட்டுப் பகுதியில் அமர்ந்து ஒன்றாக மது குடித்துள்ளனர். 

 

போதை உச்சத்தில் இருந்த நிலையில், திடீரென்று மணிகண்டனுடன் ஓரினச்சேர்க்கை உறவு வைத்துக்கொள்ள திருமலை முயற்சித்துள்ளார். இதற்கு மணிகண்டன் மறுத்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட மோதலில், அவர்கள் இருவரும் மணிகண்டனின் தலையில் கல்லைப் போட்டும், வயிற்றில் மது பாட்டிலால் குத்தியும் கொலை செய்துள்ளனர். மது அருந்துபவர்கள், அந்த இடத்திற்கு மது குடிக்க வருவார்கள் என்பதால், கொலை செய்த பிறகு இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி என்பதால் மணிகண்டனால் கத்தி கூச்சல் போடமுடியவில்லை. 

 

இதையடுத்து, அருணாச்சலத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, ஆத்தூர் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள திருமலையைத் தேடிவருகின்றனர். இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகளும் விசாரணையில் உள்ளன. இந்த சம்பவம் குள்ளம்பட்டி, அ.நாட்டாமங்கலம் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்