Skip to main content

திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் பேஸ்புக் காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்! 3 மாதத்தில் திரும்பி வந்ததால் அடிதடி!

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

சேலத்தில் தாலி கட்டிய கணவனை இரண்டே மாதத்தில் தவிக்க விட்டுவிட்டு ஃபேஸ்புக் காதலனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்தார். மூன்றே மாதத்தில் மீண்டும் கணவனுடன் குடும்பம் நடத்த வந்தபோது ஃபேஸ்புக் காதலனுக்கும், கணவருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் சின்னதம்பி (26). இவர் இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி மேகலா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர்களுக்கு 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.


இந்நிலையில் மேகலாவுக்கு, சின்னதம்பி புதிதாக செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். பெரும்பாலான இளம்பெண்களைப் போலவே அவரும் தனது புத்தம் புதிய செல்போனில் ஃபேஸ்புக் பக்கத்தில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார். 


இதில், ராமநாதபுரம் மாவட்டம் ஒட்டக்காடு பல்லவி சாலையைச் சேர்ந்த ரஹ்மான் (23) என்ற வாலிபர் மேகலாவுக்கு நட்பை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வளவாக பரிச்சயம் இல்லாத மேகலா, அந்த இளைஞரின் நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டார். இருவரும் நட்பாக ஃபேஸ்புக்கில் தினமும் உரையாடி மகிழ்ந்ததுடன், தங்களது அந்தரங்க சங்கதிகளை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகினர்.

salem omalur area women facebook contact escape police


இந்நிலையில், திருமணமான இரண்டே மாதத்தில் மேகலா திடீரென்று மாயமானார். அதிர்ச்சி அடைந்த கணவர் வீட்டார் விசாரணை செய்ததில், ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகிய ரஹ்மானுடன் மேகலா ஓட்டம் பிடித்து இருப்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் மூன்று மாதங்கள் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். 


ஆனால் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்ற கணக்காக 90 நாள்களில் ரஹ்மானுடனான உறவும் மேகலாவுக்கு கசந்து போனது. ரஹ்மானின் நடவடிக்கைகளும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வந்தார். அதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.


இதற்கு மேலும் ரஹ்மானுடன் குடும்பம் நடத்த முடியாது என்று கருதிய மேகலா, தனது கணவர் சின்னதம்பியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, 'நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள்,Õ என்று கெஞ்சி கதறி அழுதார்.


இதைக் கேட்டு மனம் இரங்கிய சின்னதம்பி, சரி... வீட்டுக்கு வா. சேர்ந்து வாழலாம் என்று மேகலாவை அழைத்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (அக். 29) மாலை ரஹ்மான், மேகலாவை அழைத்துக்கொண்டு அவருடைய கணவரிடம் ஒப்படைப்பதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தார். மனைவியை வரவேற்பதற்காக சின்னதம்பி தனது பெற்றோருடன் பேருந்து நிலையத்தில் ஆவலாக காத்திருந்தார்.


ஆனால் ரஹ்மானை கண்டதும் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற சின்னதம்பி, 'ஏண்டா உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் பொண்டாட்டிய இழுத்துக்கிட்டு ஓடியிருப்ப... உன்னை கொல்லாமல் விட மாட்டேன் பார்...' என்று அவரை தாக்க பாய்ந்துள்ளார். இருவருக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. ரஹ்மான் கல்லால் தாக்கியதில் சின்னதம்பி பலத்த காயம் அடைந்தார். அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்தி, பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 


சின்னதம்பியை தாக்கியதாக ரஹ்மான் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


இதற்கிடையே, மீண்டும் மேகலா தனது கணவரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு அழுதார். அதையடுத்து அவரை தேற்றி, மீண்டும் குடும்பம் நடத்த மேகலாவை தனது வீட்டிற்கு சின்னதம்பி அழைத்துச்சென்றார். புதிய பேருந்து நிலையத்தில் நடந்த அடிதடி சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.



 

சார்ந்த செய்திகள்