Skip to main content

கடன் வாங்கியவர் ஏமாற்றியதால் வேதனை; பார்வையற்ற மகனுடன் வயதான தம்பதி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை!

Published on 03/04/2019 | Edited on 03/04/2019


சேலத்தில், கடன் வாங்கிய நபர்கள் ஏமாற்றியதால் விரக்தி அடைந்த வயதான தம்பதியினர், தனது பார்வையற்ற மகனுடன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

p


சேலம் குகை கருங்கல்பட்டி கார்கானா ஆறுமுகம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவராமன் (77). இவர், அதே பகுதியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.


இவருடைய மனைவி புஷ்பா (66). இவர்களுக்கு பாபு (42), வெங்கடேஷ் (37) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் பாபு கண் பார்வையற்றவர். பெற்றோருடன் வசித்து வந்தார். வெங்கடேஷ், குகையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். 

 

p


சிவராமன் சிறுக சிறுக சேமித்து வைத்து இருந்த 5 லட்சம் ரூபாயை, தாதகாப்பட்டியைச் சேர்ந்த நாகசண்முகராஜ், பத்மினி ஆகியோருக்கு கடனாக கொடுத்திருந்தார். இந்த தொகையில் இருந்து கிடைக்கும் வட்டியை வைத்து, பார்வையற்ற மகன், மனைவியுடன் வாழ்ந்து வந்தார். 


கடன் வாங்கிய இருவரும் வட்டியை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் குடும்பம் நடத்த போதிய வருவாய் இல்லாமல் சிவராமன் தவித்து வந்தார். பக்கத்து தெருவில் வசித்து வரும் மகன் வெங்கடேஷ், இவர்களுக்கு அவ்வப்போது உதவி செய்து வந்தார். 


ஆனாலும் அவரிடம் இருந்தும் போதிய உதவிகள் கிடைக்கவில்லை. கடன் வாங்கிய நபரும் வட்டியையும், அசலையும் தராமல் சாக்குப்போக்கு சொல்லி அலைக்கழித்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த சிவராமன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். அதன்படி திங்கள்கிழமை (ஏப்ரல் 1, 2019) இரவு குளிர்பானத்தில் விஷத்தை கலந்து பார்வையற்ற மகனுக்கு முதலில் குடிக்கக் கொடுத்துள்ளனர். பிறகு கணவன், மனைவி இருவரும் விஷ குளிர்பானத்தைக் குடித்து மயங்கி விழுந்தனர்.


செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) காலையில் சிவராமனின் வீட்டுக்கதவு திறந்த நிலையில் இருந்தது. தினமும் காலையில் பால் வாங்குவதற்காக வரும் புஷ்பா காலையில் வராததால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருடைய வீட்டுக்குச்சென்று பார்த்தனர். அங்கு கணவன், மனைவி, பார்வையற்ற மகன் ஆகிய மூவரும் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

 

p


இதுகுறித்து சிவராமனின் மற்றொரு மகன் வெங்கேடசுக்கும், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். செவ்வாய்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து, சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


அந்த வீட்டில் நடத்திய சோதனையில், இறந்துபோன சிவராமன், கடன் கொடுத்ததற்கான பத்திரம் ஒன்றும், கடிதம் ஒன்றும் இருந்தது. அந்த கடிதத்தில் சிவராமன் உருக்கமாக எழுதியிருந்தார்.


அதில், ''சிறுக சிறுக சேர்த்த பணத்தை வைத்து வயதான காலத்தில் பார்வையற்ற மகனுடன் வாழ்ந்து விடலாம் என்று நினைத்து கையில் இருந்த 5 லட்சம் ரூபாயை கடனுக்கு கொடுத்தேன். ஆனால் சிறிது காலம் வட்டி கொடுத்துவிட்டு, பிறகு ஏமாற்ற துவங்கினர். கையில் காசு இல்லாமல் கஷ்டப்பட்டேன். இதனால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை,' என எழுதியுள்ள அவர், இறுதியில் 'இதுவும் கடந்து போகும்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.  மேலும் வட்டிக்கு வாங்கியதுடன், வட்டியை கொடுக்காமல் மிரட்டிய இரண்டு பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.  


 

சார்ந்த செய்திகள்