சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, "சேலம் மாவட்டத்தில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 24 பேரில் 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கரோனா பரவிய 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களில் 98% பேருக்கு ரூபாய் 1000 கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டு விட்டது. விளைப்பொருட்களை விற்கச் செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்தத் தடையும் விதிக்கக்கூடாது. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை எடுத்துச்செல்ல தடையில்லை; சர்க்கரை ஆலைகள் இயங்கவும் தடையில்லை. எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது பற்றி தமிழக அரசு நியமித்துள்ள குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் திங்கட்கிழமை அரசு அறிவிக்கும்.
தமிழக அரசு செய்த ஆர்டரின் பேரில் 24 ஆயிரம் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் தமிழகம் வந்துள்ளன. மத்திய அரசிடம் 50 ஆயிரம் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் கேட்கப்பட்டுள்ளன. மத்திய அரசிடமிருந்து ரேபிட் பரிசோதனைக் கருவிகள் இன்னும் வரவில்லை. மருத்துவம் சார்ந்த விஷயத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? இக்கட்டான நேரத்தில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சியினர் முனைகிறார்கள். குறை சொல்ல இது நேரம் இல்லை; உயிர் காக்கும் நேரம்; எதிர்க்கட்சி கூறும் குறைப்பற்றி கவலைப்படப்போவதில்லை." இவ்வாறு முதல்வர் பேசினார்.