தமிழகத்தில் குமாி மாவட்டத்தில் தான் ரப்பா் தோட்டங்கள் உள்ளன. சுமாா் 5 ஆயிரம் ஹெக்டா் பரப்பளவில் உள்ள அரசு ரப்பா் தோட்டத்தில் 3 ஆயிரம் பால் வெட்டும் தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். வனத்துறையின் கட்டுபாட்டில் இருக்கும் அரசு ரப்பா் தோட்டங்கள் சிற்றாா், மணலோடை, கோதையாா், கீாிப்பாறை என 4 கோட்டகங்களை உள்ளடக்கியது.
இந்த நிலையில் இங்கு பணிபுாியும் ரப்பா் தோட்ட தொழிலாளா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயா்த்தபட வேண்டிய ஊதியத்தை தமிழக அரசு உயா்த்தாததால் தொடா்ந்து போராடி வருகின்றனா். இதனால் அந்த தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கேட்டு அடிக்கடி வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனா்.
2016-ல் உயா்த்த வேணடிய ஊதியத்தை உயா்த்தாமல் அரசு பேச்சுவாா்த்தை மூலம் காலத்தை கடத்தி அது 4 ஆண்டுகளை கடந்து விட்டது. 2019 யிலும் உயா்த்த வேண்டிய ஊதியமும் உயா்த்த படவில்லை. இதில் 2016 ஊதிய உயா்வுக்காக அமைச்சா்கள் மட்டத்திலும் உயா் அதிகாாிகள் மட்டத்திலும் 49 முறைபேச்சு வாா்த்தை நடத்தி அதிலும் முடிவு எட்டாததால் கடந்த சில நாட்களாக தொடா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கிடையில் தொழிலாளா் நலத்துறை ஏற்பாட்டில் இறுதி கட்டமாக 50 ஆவது முறையாக பேச்சுவாா்த்தை நடத்தி அதில் ஊதிய உயா்வு குறித்து முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பேச்சுவாா்த்தையில் அரசு ரப்பா் கழக நிா்வாக இயக்குனா் ரஞ்சன் கலந்து கொள்வதாக அறிவிக்கபட்டது. இதையொட்டி தொழிற்சங்க நிா்வாகிகளும் தொழிலாளா்களும் நாகா்கோவில் வனத்துறை அலுவலகத்துக்கு வந்தனா். ஆனால் பேச்சுவாா்த்தைக்கு வருவதாக கூறிய நிா்வாக இயக்குனா் வரவில்லை. இதனால் தொழிற்சங்க நிா்வாகிகளும் தொழிலாளா்களும் ஏமாற்றம் அடைந்தனா்.
மேலும் இன்னொரு நாள் பேச்சுவாா்த்தை நடத்தபடும் என்று அறிவிக்கபட்டுள்ளது. இதனால் அந்த தொழிலாளா்களின் ஊதிய உயா்வு ரப்பராக இழுத்து கொண்டே செல்கிறது. மேலும் தொழிலாளா்களின் வேலை நிறுத்தத்தால் 20 டன் ரப்பா் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 12 கோடி ருபாய் அரசுக்கு நஷ்டமும் ஏற்பட்டுள்ளது என்றாா் சிஐடியு தோட்ட தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் வல்சல குமாா்.