![Rs.2 lakh theft from car](http://image.nakkheeran.in/cdn/farfuture/KPn6iDJLJD7Uclv5CfVjzgWnWnkfp0cU0hP-ZBymGEg/1605183400/sites/default/files/inline-images/money-in_4.jpg)
விழுப்புரம் நகரில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார் ராஜேஷ். இவர், கடலூர் மாவட்டம் கிளிஞ்சி குப்பத்தைச் சேர்ந்தவர். தற்போது விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் துணிக்கடை வைத்துள்ளார். இவர், தனக்குச் சொந்தமான காரில் இரண்டரை லட்சம் பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு நேற்று முன்தினம் தனது ஊரிலிருந்து விழுப்புரத்திற்கு வந்துள்ளார்.
மாலை 5 மணி அளவில் துணிக்கடை எதிரில் காரை நிறுத்திவிட்டு ராஜேஷ், தன் கடைக்குச் சென்றுள்ளார். இரவு 7 மணியளவில் திரும்பி காரின் அருகே சென்று பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே பார்த்தபோது ராஜேஷ் காருக்குள் வைத்திருந்த இரண்டரை லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ராஜேஷ், விழுப்புரம் மேற்குக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது கடைக்கு எதிரே கார் நிறுத்தப்பட்ட பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இப்படி நகரின் பல பகுதிகளில் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது நகர மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.